ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Saturday 22 November 2014

பாரத பூமி பழம்பெரும் பூமி

2014ஆம் ஆண்டு அம்மன் தரிசனம் தீபாவளி மலரில் வெளியான என் கட்டுரை. 

மஹான்கள் பலரும் தோன்றி அறம் வளர்த்த புண்ணிய பூமி நம் பாரத நாடு. நம் தர்மம் ஸ்நாதனம் என்று அறியப்படும். அழிவற்றது, பழமையானது என்பது இதன் பொருள். நன்மைகள் பெருகிவரும் காலத்தே சற்றே தீமையும் இழையோடிச் செல்லும் என்பது போல நடுவே சிலகாலம் நம் பண்பாட்டுக்குப் பொல்லாக் காலமாகிவிட்டது. மேற்கத்திய உலகின் தாக்கமும் மேற்காசியத்தின் ஆட்சியும் நம் தர்மத்தைச் சற்றே மங்கலான ஒளியில் உலகுக்குக் காட்டிவந்த காலம் சில நூற்றாண்டுகள்.

மேற்கத்திய உலகம் பாரத கலாசாரத்தை மறைந்துபட்டுப் போனது என்று முடிவுகட்டிய சமயம் அது. ஹிந்து தர்மம் பயனற்றது என்று ஒரு கருத்து உருவாக்கி வைக்கப்பட்டிருந்த நேரம். இந்தியர்கள் அடிமைகள் என்று உலகம் தூற்றிய காலம். கப்பலேறிக் கடல் தாண்டி மேற்கே போன ஒரு இளம் ஹிந்துத்துறவி பாரதத்தின் பெருமையை எடுத்துரைத்து நம் கலாசாரத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தினார். அவர் சொன்ன சொல் இது.”எதிர்காலம் குறித்து நான் கனவேதும் கொண்டிருக்கவில்லை. அது எனக்குத் தேவையுமில்லை. ஆனால் நிதர்சனம் என் கண்களில் தெரிகிறது. ஸநாதனத்தாய் விழித்துக் கொண்டுவிட்டாள். அவளது பொன்னாசனத்தில் மேலும் கம்பீரமாக அமர்ந்துவிட்டாள். அகில உலகத்தையும் அவளுக்கு அமைதியாக சமர்பித்து வணங்குவோம்.” ஆம். ஸ்வாமி விவேகானந்தர் தான் அந்த இளம் துறவி.


பாரத தேசம் என்பதை ஒருங்கிணைத்து வைத்ததே மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் என்று ஒரு வரலாற்றுப் பிழை நம் புத்தகங்கள் பலவற்றில் உலா வருகிறது. நம்மில் சிலரும் சற்றே யோசித்து,”ஆமாம். இங்கேயே என்ன வாழ்ந்தது? சேரன் சோழன் பாண்டியன் என்று பிரிந்து கிடந்தது சரித்திரம் தானே?” என்று பிழைக்குப் பின்பாட்டுப் பாடுவதைக் காண்கிறோம்.

வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பௌவத்தின் குடக்கும்


இப்பாடல் புறநாநூற்றில் காரிக்கிழார் எனும் புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திப் பாடிய பாடலின் தொடக்கம். இதில் பாரத தேசத்தின் எல்கைகள் குறித்துச் சொல்லி அதை வென்று ஆளும் மன்னன் முதுகுடுமிப் பெருவழுதி என்று புகழ்ந்துரைக்கிறார்.

இதையே பாரதியார் சற்றே எளியதமிழில்
வடக்கில் இமய மலை பாப்பா
தெற்கில் வாழும் குமரியடி பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - அதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா

என்று தேசத்தைப் போற்றுகிறார்.


சங்கப் பாடல்கள் போலவே தொன்மை மிக்க நம் புராணங்களிலும் பாரத தேசத்தைப் பற்றிய எல்லை வரையறைகள் தெளிவாக உள்ளன.
உத்தரம் யத் ஸமுத்ரஸ்ய ஹிமாத்ரே: சைவ தக்ஷிணாம்|
வர்ஷம் தத் பாரதம் நாம பாரதீ யத்ர சந்ததி:||
(விஷ்ணு புராணம்)

கடலுக்கு வடக்கிலும் இமயத்திற்குத் தெற்கிலும் இருக்கும் நிலப்பரப்பு பாரதம் எனப்படும் அதன் மக்கள் பாரதியர் என்றும் அறியப்படுகிறார்கள் என்கிறது விஷ்ணு புராணம்.

இதே விதமாக
ஹிமாலயம் ஸமாரப்ய யாவதிந்து சரோவரம்|
தம் தேவநிர்மிதம் தேசம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே||

என்று பிரஹஸ்பத்ய ஸாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. இது ஹிதோபதேசம் உள்ளிட்ட பல நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
”ஹிமாலயத்தில் தொடங்கி இந்து மஹா சமுத்திரம் வரை தேவர்களால் அமைக்கப்பட்ட தேசமே ஹிந்துஸ்தானம்” என்பது இதன் பொருள்.
ஹி என்ற ஹிமாசலத்தின் முதலெழுத்தையும் இந்து மாக்கடலின் பெயரில் ‘ந்து’ என்பவற்றையும் இணைத்து ஹிந்து என்ற பெயர் வந்தது. ஸ்தானம் என்பதற்கு இடம், நிலம் என்பது பொருள். ஆகவே இந்த நிலப்பரப்பு ஹிந்துஸ்தானம். இங்கே வசிக்கும் மக்கள் ஹிந்துக்கள்.

இது வழிபாட்டுமுறை சார்ந்த பிரிவு அல்ல. உலகின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வாழ்க்கைமுறை இருப்பது போல இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட பூமியில் வாழும் மக்களின் வாழ்வுமுறை சார்ந்தே ஹிந்துக்கள் என்று அறியப்பட்டனர்.

ஹிந்துஸ்தானத்தின் வாழ்வியல் முறை ஸநாதன தர்மம் என்று அறியப்படுகிறது. ஸநாதனம் என்றால் தொன்மைமிக்கது, அழிவில்லாதது என்று பொருள்.

ஸநாதன தர்மத்துக்கு என்று தனி விதமான அடையாளங்கள் சின்னங்கள் ஏதுமில்லை. பல்வேறு அடையாளங்களையும் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டது நம் தர்மம். வழிபாட்டு முறைகள் என்று பார்த்தாலும் பல்வேறு முறைகளின் சங்கமமே நம் தர்மத்தின் வழிபாட்டு முறை. ஆதிசங்கர பகவத் பாதர் தொகுத்தளித்த ஆறு வழிபாட்டு நெறிமுறைகளும் அதனோடு இயைந்து வரும் நாட்டார் தெய்வ வழிபாடும் நம் தர்மத்தின் அங்கம்.
ஸநாதனிகள் தம் நடத்தையால் அறியப்படுபவர்கள். வசுதைவ குடும்பகம் என்ற கோட்பாட்டை மனதில் நிறுத்தி உலகின் ஒவ்வொரு உயிரினத்தையும் தன்னில் ஒருவராக உணரும் எவரும் ஸநாதன தர்மத்தைப் பின்பற்றுபவரே.
வசுதைவ குடும்பகம் என்றால் என்ன?
अयं बन्धुरयं नेति गणना लघुचेतसाम् | उदारचरितानां तु वसुधैव कुटुम्बकम् ||
அயம் பந்துரயம் நேதி கணனா லகுசேதஸாம்|
உதாரசரிதானாம் து வஸுதைவ குடும்பகம்||
(மஹோபநிஷத்)

இவை நெருக்கமானவை இவை அந்நியமானவை என்று கொள்வது தாழ்ந்த மனது.
உலகம் முழுமையும் ஒரு குடும்பம் தான் என்று கொள்வது உயர்ந்த மனது.
என்பதே இதன் பொருள்.
இது ஆன்ம சாதனையில் மிக உயரிய நிலை அடைந்த ஒரு மனிதனின் மனோநிலையாகச் சொல்லப்பட்டுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது இதற்கு இணையான வாக்கியம். ஆப்பிரிக்க கலாசாரத்தின் உபுண்டு தத்துவம் இதே போன்றது.

ஆன்ம சாதனையில் மிக உயரிய நிலை எட்டிய மஹான்களுக்கு மண்ணில் நெளியும் புழுவும் மண்ணாளும் மன்னனும் படைப்பின் பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிக்கும் தன்னைப் போன்ற உயிரினங்கள். அவ்வளவே! ஒரு கேள்வி எழலாம். இப்படி எல்லோரும் ஓர் குடும்பம் என்றால் தவறுகளக் கண்டிப்பதும் குற்றங்களை தண்டிப்பதும் எப்படி? இதற்கான விடை தேடும் போது தர்மத்தைச் சற்றே ஆழ்ந்து நோக்கவேண்டும். புரிந்து கொள்ளக் கடினமானது அல்ல.

உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு அவர்களது வாழ்வு முறைக்கேற்ப வெவ்வேறு விதமான நியாயங்கள் இருக்கின்றன. பகவத் கீதையில் கண்ணன் பார்த்தனுக்குச் சொன்ன வாக்கே அதுதான். தர்மம் என்பதும் அதர்மம் என்பதுமே வாழ்வியல் முடிவுகளுக்கு முக்கியமான அடிப்படைகளாக இருக்கவேண்டும். தர்மம் முறையே பின்பற்றப்படுவது தர்மம் காக்கப்படுவதாகும். தர்மம் வழுவும் செயல்களைக் கண்டிப்பதும் தர்மத்துக்கு விரோதமான செயல்களை கடுமையாக எதிர்த்து தண்டிப்பதுமே கற்றறிந்தவர்களும் ஆட்சிப்பணி செய்வோரும் ஆற்றவேண்டிய கடமை.
வாழ்வுமுறை என்பது ஒவ்வொருவர் செய்யும் பணி சார்ந்தும் இருக்கும் இடம் சார்ந்தும் அமைகிறது. நம் தேசம் முழுதும் சுற்றினாலும் பழக்க வழக்கங்கள் வேறுபட்டிருக்கும் ஆனால் வாழ்வின் அடிநாதம் மாறாது. நம் கிராமங்களில் இன்றும் மக்கள் காலையில் எழுந்ததும் சூரியனை வணங்கிவிட்டுப் பசுவையும் வணங்குவர். பின் ’எல்லாத்தையும் நல்லா வெச்சிரு சாமி’ என்று ஒரு பிரார்த்தனை. அதன் பின் அன்றைய தினத்தின் பணியைச் செய்யக் கிளம்பிவிடுவர்.

வட இந்தியாவில் போய்க் கிராமங்களில் பார்த்தாலும் இதே முறை. காலையில் எழுந்து சூரியனையும் பசுவையும் வணங்கிவிட்டு, “ஸப்கா சுக் சுக் ரகோ பகவான்” என்ற பிரார்த்தனையுடன் பணிகளைத் துவக்குவார்கள். இதை ஏன் செய்கிறோம்? யார் சொல்லிக் கொடுத்தார்கள்? இந்த முறையின் வரலாறு என்ன என்பதெல்லாம் அந்த மக்களுக்குத் தெரிந்துதான் செய்கிறார்களா?
கேட்டபோது வந்த பதில் “இது காலங்காலமாக நடப்பது” என்பதே. ஆனால் அதோடு நில்லாமல் இதை ஏன் எதற்கு என்று கேட்கிறாயே உனக்கு உன் தாய் தந்தையர் இதைக்கூடவா சொல்லித்தரவில்லை என்று பல இடங்களில் எதிர்க்கேள்வி திணறச் செய்ததும் உண்டு. எல்லோரும் இன்புற்றிருக்க என்பதே சநாதன தர்மம் எனப்படும் இந்த மண்ணின் வாழ்வியல் முறையின் அடிநாதம்.

இதில் ஒவ்வொருவர் தொழிலுக்கு ஏற்ப அவரவருக்கான நியாயங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இது வர்ணாஸ்ரம தர்மம் என்று அறியப்பட்டது. இதில் நான்கு பிரிவுகள் இருந்தன.
கற்றறிந்தவர்களாக, சான்றோராக இருந்தவர்கள் பிராமணர்கள் என்று அறியப்பட்டனர். இவர்கள் தர்மத்தையும் வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வுகளையும் சொல்லி சமுதாயத்துக்கு உதவினர்.
காவல் தொழிலும் ஆட்சிப்பணியும் செய்துவந்தோர் க்ஷத்ரியர் என்று அறியப்பட்டனர். போர்த்திறம் கொண்டு தேசம் காக்கும் பணியில் ஈடுபட்டுவந்தனர் இவர்கள்.
வணிகம் செய்து பொருள் ஈட்டி சமுதாயத்துக்கு பொருளாதாரம் செழிக்க உதவியோர் வைசியர் எனப்பட்டனர். பொருளாதார விவகாரங்களில் இவர்கள் நிபுணர்களாக இருந்தனர்.
உடல் உழைப்பில் ஈடுபட்டோர் சூத்திரர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டனர். வயல்களிலும் பிற இடங்களிலும் உழைப்பது இவர்கள் பணியாக இருந்தது.

பாரத சமுதாயம் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் இந்த நால்வருண அமைப்பும் அவர்கள் கிராம நன்மைக்குப் பாடுபடுவதுமாக வாழ்க்கை இருந்தது. இப்படிப் பல கிராமங்கள் சேர்ந்து ஒரு ராஜ்ஜியம் என்று மொத்தமாக 57 ராஜ்ஜியங்கள் இமயத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் இருந்தன. 57 ராஜ்ஜியங்களில் பல சிற்றரசுகள் இருந்தன. அது வரலாறு.

இந்த வர்ணாஸ்ரமம் மிகப் பெரிய குற்றம் என்பது போலச் சில சித்தாந்திகளால் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் அது தொழில்சார் பிரிவு மட்டுமே, நம் புராணங்கள் இதிஹாசங்கள் இவற்றை வலியுறுத்தியே வந்திருக்கின்றன. தொழில் சார்ந்த பிரிவுகளையும் வேற்றுமைப் படுத்தியோ உயர்வு தாழ்வு கொண்டோ நோக்குதல் கூடாது என்பது வழிவழியாக ஆதிசங்கரர் முதலான பெரியவர்களாலும் (மனீஷா பஞ்சகம்) அறிவுறுத்தப்பட்டு வந்திருக்கிறது.

 நம் சநாதன தர்மத்தைக் குறைகூறுவோர் இந்த வர்ணப் பிரிவினையைத் தவிர வேறெதுவும் சொல்ல வழியில்லை. ஆதிசக்தி அம்பிகையின் துதியாம் லலிதா சகஸ்ரநாமத்தில் வர்ணாஸ்ரம விதாயினீ என்றொரு திருநாமம் தேவியைக் குறித்துச் சொல்லப்படுகிறது. உலகின் அனைத்து உயிர்களுக்கும் தாயாக ஆப்ரம்ஹ கீட ஜனனீ என்று போற்றப்படும் தேவி வர்ணாஸ்ரமம் தீயது என்றால் அதனுடன் சம்பந்தப்பட்டிருப்பாளா? இது குறித்து ஒரு சிறு விளக்கத்தைப் பார்க்கலாம்.

ஆப்ரம்ஹ கீடஜனனீ => அற்பப்புழு முதற்கொண்டு ஆதிபகவன் வரையான  அனைவருக்கும் தாய்.
வர்ணாஸ்ரம விதாயினீ => வர்ணாஸ்ரமத்தை அளித்து ஆள்பவள்.

விதாயின் என்ற சொல்லுக்கு அளித்தல், நிர்வகித்தல். ஆளுதல், அதிகாரப்ரயோகம் செய்தல், நடாத்துதல், காரணமாயிருத்தல் என்றெல்லாம் பொருள்.

விதாயினீ என்றால் அளிப்பவள், நிர்வகிப்பவள், ஆள்பவள், நடாத்துபவள், அதிகாரப்ரயோகம் செய்பள், காரணமாயிருப்பவள் என்பதே பொருள்.
வர்ணாஸ்ரமம் என்பது தொழில் ரீதியான குழுக்களாக மாந்தரைப் பிரித்து வைத்த சமுதாயச் செயல்பாடு. இதற்கும் இறையை அடைய வழிகாட்டும் தர்மக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமில்லை.
இந்த வர்ணாஸ்ரமத்தை அளிப்பவள், நிர்வகிப்பவள் இதில் அதிகாரப்ரயோகம் செய்பவள் என்று இறைவியை ஏன் சொன்னார்கள்?


இந்தப் பிரிவுகளில் ஒவ்வொரு மனிதனும் இருக்கும் இடம் அவனுக்கு இறை அளித்த கொடை. இது குறித்து மனிதா நீ பெருமை கொள்! ஆனால் கர்வம் கொள்ளாதே. இதில் உயர்வு தாழ்வு கண்டு கர்வத்தில் கொக்கரித்தால் இந்த ஏற்பாடுகளை நிர்வகித்து அதிகாரம் செலுத்தும் இறைவியால் நீ கீழானது என்று தூற்றும் நிலைக்குத் தள்ளப்படுவாய் என்பது எச்சரிக்கை.

உன்னால் ஆவது இங்கு எதுவுமில்லை. வர்ணாஸ்ரமத்தில் உன் இடம் இறைக் கொடையே அன்றி உன் உயர்வு தாழ்வு ஒரு பொருட்டே அல்ல என்பதைக் குறிக்கவே இந்தப் பெயர் இறைவிக்கு வந்ததாக அறியப்படுகிறது.
எந்தச் சமுதாய ஏற்பாட்டையும் இறையின் துணை கொண்டு செய்வது நீதி பரிபாலனத்துக்கு பேருதவியாக இருக்கும் என்பது மனசாட்சி உயிர்ப்புடனிருந்த நம் முன்னோர் செய்த ஏற்பாடு.

ஆப்ரம்ஹ கீடஜனனீ என்று அனைத்துயிர்களுக்கும் தாயாக அறியப்படுபவளின் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் வேற்றுமை பாராட்டலாமா என்ற கேள்விக்கு, வர்ணாஸ்ரம விதாயினீ என்று பணி சார்ந்த பிரிவுகளை அளித்தாள்பவளே தாய்தான் என்பது பதில்.

ஆக, வர்ணாஸ்ரமப் பிரிவுகள் தாயால் தரப்பட்டவை. பணிகளின் வேறுபாட்டைக் கொண்டு பிள்ளைகள் தமக்குள் உயர்வுதாழ்வு பாராட்டினால் தாய் கண்டிப்பாள். திருந்தாவிடில் தண்டிப்பாள். பணி சார்ந்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் அவற்றைக் கொண்டு வேற்றுமை பாராட்டாதே என்று சொல்கிறது லலிதா ஸகஸ்ரநாமம்.

இது போல நம் முன்னோர் தர்மம் குறித்துச் சொல்லிச் சென்ற நல்ல பல விஷயங்களைக் காலப் போக்கில் சரியான புரிதலின்றி நாம் விட்டிருக்கிறோம். நம் தர்மம் வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் வழிகாட்டுகிறது. அதைச் சரியாகப் புரிந்து கொள்ள தக்கதோர் நல்லவரின் வழிகாட்டுதல் அவசியம். அத்தகைய வழிகாட்டுதல் இல்லை என்றால் சொல்லபட்ட விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாது நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு தர்மத்தையும் பின்பற்றாது விட்டுவிடும் அபாயம் இருக்கிறது. 
தாய்நாடும் தர்மமமும் நம்மிரு கண்கள் என்பது பெரியோர் வாக்காகும். ஆகவே தேசம் குறித்தும் தர்மம் குறித்தும் தெளிவு பெற விழைவோர் தக்க குருவை நாடிச் சரியாகப் புரிந்து தெளிவதே சிறப்பு.

No comments: