ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 30 September 2012

இறைவனை அடைய வேண்டாம்

அவாவறுத்தல் என்பது மிகக் கடினமான செயல். அவா எனப்படுவது மிகவும் மெல்லிய உணர்விழை. ஆனால் பட்டு நூலிழை போன்று அறுக்கக் கடினமானது.   உயர்ந்த பொருள் இப்படிப் போனதே என்று பட்டு நூலை அறுத்தால் மனம் அடித்துக் கொள்ளும். அதே போல ஆசை  விடுப்பது சுலபம் எனினும் மனம் தான் எண்ணியது ஈடேறவில்லை என்று துவளும். பல பணிகளுக்கு ஊறு செய்யும்.


ஆகவே அதை ஈடேற்றி விட்டால் முடிந்தது என்று அதற்கான செயலில் இறங்குவோம். மனம் அங்கே அக்குறு மகிழ்வில் லயித்து வெளிவர விடாது. சற்றே முயன்று வெளிவந்தாலும் மீண்டும் அதே குறு மகிழ்வுக்கு இட்டுச் செல்ல விழையும். அதில் திளைக்க எண்ணும். அந்த மகிழ்வு விட்டு விட்டு வருவது என்றாலும் அக்குறுகிய கால மகிச்சிக்கு மனம் ஏங்கும்.


உடலை அடக்குதல் சுலபம். 10 நாட்கள் நீராகாரங்கள் மட்டுமே என்று இருந்தால் புலன்கள் வேகமிழக்கும். மேலும் சில கடுமையான உண்ணா விரதங்கள் இருந்தால் புலன்கள் தம்வசம் நம்மை இழுக்க இயலாது அடங்கத் துவங்கும். அவற்றை அப்படியே சுலபமாக நல்வழிக்குக் கொண்டு வரலாம். ஆனால் மனம் அடங்காது. மனம் குட்டியானை போன்றது. கட்டி வைத்தாலும் தளை அறுத்து தன் நோக்கிற் செல்லத் துடிக்கும்.

அப்படிப்பட்ட மனதை அடக்கி இறைவனை அடைவது மிகப் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சற்றே கூர்ந்து நோக்கினால் இறைவனை அடைவது என்ற இலக்கு ஞான மார்கத்துக்கு மாறானது என்பது புலப்படும். இறைவனை அடைவது என்பது அத்வைத தத்துவத்துக்கு மாறானது.

அப்படியானால் வழிபாடு தேவையில்லையா? ஆலயங்கள் ஆக்கம் தராதா? மந்திரங்கள் மதிமயக்கத்தில் வெளிப்பாடா? நீ எழுதுகிறாயே இது பொய்யா? இல்லை.

நான் ஞானத்தேடல் கொண்டிருக்கவில்லை என்று சொல்வோர் வழிபாட்டு முறைகளை மட்டும் கைக்கொள்ளலாம். அண்டவெளியெங்கும் பரவிய சக்தியைச் சிறு தேவைகளுக்கு உதவக் கேட்பதும் அதைப் புகழ்ந்தேத்துவதும் வழிபாட்டு முறைகளே. ஒரு பேரரசனிடம் உணவின் சுவை பற்றிச் சிலாகித்துப் பேசுவதும் உள்ளூர் விஷயங்களை உவப்போடு சொல்வதும் போல அதுவும் உலக வாழ்வின் ஓட்டத்துக்குத் தேவை என்பதில் ஐயமில்லை.
ஆனால், உலக சம்பந்தமான விஷயங்களைச் சற்றே விடுத்து ஞானத்தேடல் கொண்டோர்க்கு இறைவன் என்பவன் தன்னிலிருந்து வேறுபட்டவன் அல்லன்.


மெய்யெனப் படுவதொன்றே அஃதோ பல்வேறு
பெயர்களால் வழங்கப் படும்

இது அத்வைதத்தின் அடிநாதம். அப்படியெனில் ஜீவாத்மா பரமாத்மா என்ற பிரிவுகள் மாயை. ஜீவன் பரமனை அடைவது என்பது நடவாது. பிண்டத்திலிருப்பதுவே அண்டத்திலிருப்பதுவும். சராசங்களெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதுவே குறுகிய சிற்றெறும்பிலும் பெருகிய மதவேழத்திலும் உள்ளது.

இதையே சிவன் போக்கைத் தம் போக்காகக் கொண்ட சித்தர் பெருமக்கள்:

நட்டகல்லைத் தெய்வமென்று நாலு புஷ்பஞ் சாற்றியே
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லு மந்திரமேதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்

என்று உணர்த்தத் தலைப்பட்டனர். 
நாதன் நம்முள் இருக்கையில் எதிரே இருக்கும் கற்சிற்பத்தில் அவனைத் தேடுவது மூடத்தனம். மந்திரங்கள் நம்மை நாம் உயர்த்திக்கொள்ளவேயன்றி எங்கோ இருக்கும் இறைச் சக்தியை இறும்பூது எய்த வைக்க அல்ல.

ஸ்ரீ வித்யா உபாசனையில் ஒரு கட்டத்துக்கு மேலே ஆத்ம பூஜை செய்வர். சக்தி தம்முள் இருப்பதை உணர்ந்து  பூஜிப்பர். பிறகு அதுவும் நின்று நானே சக்தி என்ற நிலையை அடைவர். 

திருமூலர் இதையே வெகு எளிமையாகச் சொன்னார்:

சீவனெனச் சிவனென வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனா யிட்டிருப்பரே
 
ஜீவன் என்பவன் பரமனை அறிந்துகொண்டால் அவன் இவன் என்று ஏதுமில்லை என்பது புரிபடும்.

இதையே தான் கீழ்வரும் செய்யுளும் உணர்த்துகிறது.

ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள்
ஈசனோடா யினும் ஆசை யறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே

ஈசன் என்றொருவன் இருக்கிறான், அவனை நான் அடைய வேண்டுமென்ற ஆசை இருப்பின் அவ்வீசனின் அருகாமை போன்றொரு தோற்றம் கிட்டியதும் மனம் மகிழ்ந்து குதிக்கும். அத்தோற்றம் அகன்றதும் மனம் வருந்தித் துடிக்கும்.  இந்த ஆசையை விடுவதற்கு நானே ஈசன் என்ற உண்மையை உணர வேண்டும். அதை உணார்ந்தால் ஈசனை அடையும் ஆசை அறுபடும்.  ஆனந்தம் பெருகி மகிழ வழி பிறக்கும்.

இந்த உண்மை உணர்தல் என்பது புரிதலைத் தாண்டி நிகழ்வது. இதற்கு குரு முகமான வழிகாட்டுதல் அத்தியாவசியம். என் புரிதலுக்குக் காரணம் என் குரு நிறைஞானி தக்ஷிணாம்னாய பீடாதிபதி வ்யாக்யான சிம்ஹாசனாதீஸ்வர அனந்தஸ்ரீ விபூஷித பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் கருணை கூர்ந்து சாதுர்மாஸ்ய விரதத்தை சென்னையில் அனுஷ்டித்ததே. அவர் தினமும் அருளி வந்த உபதேசங்களைச் செவிமடுத்ததில் இந்த விஷயம் சற்றே புரிந்திருக்கிறது.

உணர்தலுக்கு இன்னும் உறுத்தாய் இருக்க வேண்டும். மனமென்னும் மதயானைக்குட்டி முரண்டு பிடிக்கிறது. அதுவும் குருவருளால் வசப்படும் நாள் விரைவில் அமையும் என்பது  நம் நம்பிக்கை.
ஸ்ரீ குருப்யோ நம:


*மேற்கூறியவை என் குருவின் அருளாசி காரணமாக எனக்குப் புரிந்தவற்றை நான் எழுதியது. இதற்கு என் குருநாதரே மூலகாரணமாவார். இதில் குற்றங்குறை ஏதுமிருப்பின் அஃதென் புரிதலின் குறைபாடே.

No comments: