ஐயன்சொல்

Disclaimer

நமஸ்காரம். வருக வருக!! மீனாக்ஷிசுந்தரமய்யர் என்ற அருண்பிரபு ஆகிய நான் ஸநாதன தர்மத்தில் மாறாப் பற்றுதல் கொண்டவன். இந்த வலைப்பூவில் வரும் கருத்துக்கள் ஸநாதன தர்மம், பாரத தேசியம் சார்ந்த கருத்துக்களே.

இந்தக் கருத்துக்கள் உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்க்கோ, உங்களுக்கு வேண்டாதவர்க்கோ ஒப்புதல் இல்லாதனவாயிருந்தால் கருத்துக்களை விவாதிப்போம். தெளிவு பெறுவோம்.

அன்புடன் என்றும்,

அருண்அம்பி. (@arunambie)

Sunday 9 January 2022

பிரதமரின் பாதுகாப்பும் தேசத்தின் எதிர்காலமும்

கடந்த ஜனவரி 5ஆம் நாள் காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. 40000 கோடி ரூபாய்கள் பெறுமானமுள்ள மத்திய அரசின் திட்டங்களை அர்ப்பணிப்பதும், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும் செய்யவிருந்தார். பஞ்சாபின் படிண்டா விமானப் படைத் தளத்துக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய பலிதானிகள் நினைவிடம் செல்லவிருந்தார் பிரதமர். அங்கே அஞ்சலி செலுத்தியபின் ஃபெரோஸ்பூரில் பொதுக்கூட்டத்துக்குச் சென்று நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து மக்களிடையே உரையாற்றத் திட்டமிட்டிருந்தார். படிண்டா விமான தளத்தில் இறங்கியபோது வானிலை சரியில்லை என்று சற்று நேரம் பொறுத்து ஹெலிகாப்டர் எடுக்கலாம் என்று விமானப்படை ஆலோசனையை ஏற்றுக் காத்திருந்தார். ஆனால் தலைமைத் தளபதி ராவத்தின் விமான விபத்தை அடுத்து வானிலை முற்றிலும் சரியாகாமல் விமானப்படை அனுமதி தருவதாக இல்லை.

Wednesday 1 December 2021

விவசாய சட்டங்கள் - 2020, நடைமுறைகள், நீக்கம், விளைவுகள்

ஒரே நாடு - டிசம்பர் 1-15, 2021 இதழில் வெளியானது:

கடந்த 2020ஆம் ஆண்டு நம் மத்திய அரசு 3 விவசாயச் சட்டங்களை இயற்றியது. இவற்றை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்த போது எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. எதிர்ப்பு கோஷம், கூச்சல் குழப்பம் வெளிநடப்பு என்று விவகாரம் செய்தனர். இவ்வளவுக்கும் 2019 தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று இதே சட்டங்களைக் கொண்டுவர இதே எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்து வாக்குறுதியும் கொடுத்திருந்தனர். பிறகு ஏன் எதிர்ப்பு? அரசியல் என்பது தவிர வேறு பதில் இல்லை. நல்ல சட்டங்கள் சிறப்பான திட்டங்கள் என்று இருந்த போதும் நடைமுறையில் சில ஓட்டைகளை விட்டு தங்கள் ஓட்டு வங்கி உள்ளிட்ட வங்கி விவரங்களைப் பலப்படுத்திக் கொள்வது வழக்கத்தில் இருந்தது என்றும், இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதம் அப்படிப்பட்ட வங்கி விவகாரங்களுக்குத் தோதாக இருக்காது என்பதுமே காரணம் என்று அரசியல் கூர்நோக்கர்கள் பலர் கருத்துச் சொல்கிறார்கள்.
 

ஏன் என்று இந்த விவகாரத்தின் உள்ளே புகுந்து ஆராயுமுன்னர் சட்டங்கள் குறித்து சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

2017ஆம் ஆண்டு மத்திய அரசு மாதிரிச் சட்டங்கள் என்று பல வரைவுகளை பொதுமக்கள் பார்வைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் வைத்தது. விவசாயத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழு 2018-19ல் இந்த மாதிரிச் சட்டங்களில் சொல்லப்பட்ட பல்வேறு நடைமுறைகள் ஏற்கனவே பல்வேறு மாநில/மத்திய சட்டங்களில் இருந்தாலும் பலவும் அமல்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தது.

மேலும் விவசாய விளைபொருள் விற்பனைக் குழுமம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட மண்டிகள், சந்தைகள் நேர்மையான முறையில் செயல்பட்டு நியாயவிலையை விவசாயிகளுக்கு வழங்கவில்லை என்றும் அதீதமான தரகுத் தொகை, தேவைக்கு மீறிய கட்டணங்கள், மண்டி/சந்தைகளின் ஏகபோகம் என்று விவசாயிகளுக்கு பாதிப்பே அதிகம் என்று நிலைக்குழு அறிக்கை அளித்தது.

விவசாயச் சட்ட அமலாக்கம் குறித்து ஆராய ஜூலை 2019ல் ஏழு முதலமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பின்னர் ஜூன் 2020ல் மத்திய அரசு விவசாயச் சட்டங்கள் மூன்றைப் பிறப்பித்து உத்தரவிட்டது. அவற்றின் விவரம் இங்கே:

1.விவசாயப் பொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக(விரிவாக்கம் மற்றும் எளிதாக்கல்) சட்டம் 2020
அ. குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விற்பனை என்று இருந்த நடைமுறையை மாற்றி வணிகத்தின் எல்கையை விரிவாக்குகிறது. (திருநெல்வேலி விவசாயி நல்ல விலை கிடைத்தால் நேரடியாக தில்லி வியாபாரிக்கு விற்கலாம். வட்ட, மாவட்ட, மாநில எல்லைகள், முகமைகள் கட்டுப்படுத்தாது)
ஆ. விவசாய விளைபொருட்களை இணையச் சந்தையில் விலைபேசி விற்க வகை செய்கிறது.
இ. மாநில அரசுகள், வரி, கட்டணம் என்று எந்தவிதமான வசூல்களும் விளைபொருள் மீதோ, இணைய வியாபாரத்தின் மீதோ செய்யத் தடை விதிக்கிறது.

2.விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதிப்பாடு மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 2020

அ. விவசாயிகள் விளைபொருள் வாங்குவோரிடம் முன் ஒப்பந்தம் செய்து கொள்ளல் (விலை உள்பட)
ஆ. இதில் ஏற்படும் சர்ச்சைகளுக்குத் தீர்வு காணவும் வரைமுறை வகுக்கப்பட்டுள்ளது.

3.அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தச்) சட்டம், 2020

அசாதாரணமான சூழ்நிலைகளிள் தவிர பிற நேரங்களில்
அ. தானியங்கள், பருப்பு வகைகள், உருளைக்கிழங்கு, வெங்காயம், எண்ணை வித்துக்கள், சமையல் எண்ணை இவற்றை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவற்றை கிடங்குகளில் வைப்பதற்கு இருந்த வரம்புகள் நீக்கப்பட்டுள்ளது.
ஆ. அசாதாரணமான விலையேற்றம் ஏற்பட்டால் கிடங்குகளில் சரக்கு வைக்கும் அளவுக்கு வரம்புகள் விதிக்கப்படும்.

இவையே மூன்று சட்டங்கள். இவற்றை எதிர்த்து பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி 12 அன்று உச்சநீதிமன்றம் இந்தச் சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்தது. விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் என்னென்ன என்பதை ஆராய்ந்து சொல்ல ஒரு குழுவை அமைத்தது. பிப்ரவரி மாதத்தில் இந்தக் குழு பொதுமக்கள் விவசாயிகளிடம் இந்தச் சட்டங்கள் குறித்த சிக்கல்களை விளக்கிச் சொல்லக் கேட்டது.

பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்தச் சட்டங்களுக்கு மாற்றாக மாநிலச் சட்டங்களை இயற்றின. அவை ஆளுநர் ஒப்புதல் பெறக் காத்திருக்கின்றன.

செப்டம்பர் 20 அன்று வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் “விவசாயிகளுக்கு நன்மை செய்ய பல கட்சிகள் வாக்குறுதி கொடுத்தார்கள். நாம் அவற்றை நல்லபடியாகச் சட்டமாக்கியிருக்கிறோம்” என்றார். இதன் மூலம் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மை விளையும். விவசாயம் லாபகரமாக மாறும் என்று பிரதமர் சொன்னார். கீதா கோபிநாத் எனும் ஹார்வார்டு பொருளாதார அறிஞர் (சர்வதேச நிதியத்தின் முன்னாள் பொருளாதார ஆலோசகர்) இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும், இடைத்தரகர்களின் லாபத்தை மட்டுப்படுத்தும் என்று கருத்துச் சொன்னார். மேலும் தில்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கோரக்பூர் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம், குஜராத் பல்கலைக்கழகம் என்று பல பல்கலைக்கழகங்களின் 866 பொருளாதார, விவசாயத்துறைப் பேராசிரியர்கள் இந்தச் சட்டம் விவசாயிகளுக்கு நல்லது என்று கருத்துக் கூறி அறிக்கை தந்தனர்.

அதே நேரம் கௌஷிக் பாசு எனும் உலகவங்கி முன்னாள் பொருளாதார ஆலோசகர் இது தவறான சட்டம், விவசாயிகளுக்கு எதிரானது என்றார். மேலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், கொல்கத்தாவிலுள்ளா இந்தியப் புள்ளியியல் நிறுவனம், லண்டன் சினிமா பள்ளி, தென்னாப்பிரிக்க ஜோஹானிஸ்பர்க் பல்கலைக்கழகம், ஐஐஎம் கொல்கத்தா, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம், நார்வேயிலுள்ள ஓஸ்லோ பல்கலைக்கழகம், அமெரிக்க மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் இவற்றில் இருந்து 413 பேராசிரியர்கள் சட்டங்களுக்கு எதிராகக் கருத்துக்கூறி அறிக்கை அளித்துள்ளனர்.

ஷேத்காரி சங்கடனா எனும் மராட்டிய விவசாயிகள் அமைப்பு இந்தச் சட்டம் அவசியமானது என்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளை பலவீனமானவர்களாகவே ஆக்குகிறது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

பாரதிய கிசான் சங்கம் எனும் அமைப்பு பாராளுமன்ற நிலைக்குழு இந்தச் சட்டங்களை ஆராய வேண்டும் என்றும் அவசரமாக இந்தச் சட்டங்களை நிறைவேற்றியது தவறு என்றும் சொன்னது. குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று பல விவசாய அமைப்புகள் கூறின. மத்திய விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் முந்தைய சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை சேர்க்கப்பட்டதில்லை ஆகவே புதிய சட்டத்தில் சேர்க்கவேண்டியதில்லை என்று சொன்னார். பல்வேறு அமைப்புகள் விவசாயிகளுக்குச் சட்டத்தை விளக்கவும், விவாதிக்கவும் அழைப்பு விடுத்தன. பலனில்லை.

உச்சநீதிமன்றக் கமிட்டியில் போய்க் கருத்துச் சொல்ல போராட்டக்காரர்கள் மறுத்தனர். சட்டங்களைத் திரும்பப் பெற்றால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவோம் என்றனர். உச்சநீதிமன்றம் செய்வதறியாது திகைத்து நின்றது.

போராட்டக்காரர்களுக்கு உணவும், இருப்பிடமும் போராட்டம் நடக்கும் இடத்திலேயே அமைத்துக் கொடுக்க கனடா, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வாழும் சீக்கியர் அமைப்புகள் பண உதவி செய்தன. இதில் அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்தது. வெளிநாட்டு நிதி அளித்தல்/பெறுதல் சட்டங்களின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் கொடுத்த நிதி தடுக்கப்பட்டது.

ஆனால் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஆதரவோடு இந்தப் போராட்டங்களில் கலகம் செய்ய காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் முற்பட்டன என்று தகவல்கள் வந்தன. தில்லியில் கலவரம், தேசியக்கொடி அவமதிப்பு, போராட்ட களத்தில் கொலைகள் என்று அரசு இரும்புக்கரம் நீட்டத் தேவையான அத்தனை வேலைகளும் நடந்தன. ஆனாலும் அரசு அமைதிகாத்து போராட்டக்காரர்களின் பின்புலங்களை ஆராய்ந்து தேசப் பாதுகாப்புக்கு பங்கம் வராமலிருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் சில உள்நாட்டு நிகழ்வுகள் மத்திய அரசின் கவனத்தையும் தேசப்பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் கவனத்தையும் ஈர்த்தன. பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருள் நடமாட்டம் குறித்த தகவல்கள், எல்லை கடந்து ஆளில்லா குறு விமானங்கள் (drone) மூலமாக ஆயுதங்கள் கடத்தும் முயற்சிகள் (முறியடிக்கப்பட்டன என்பது நமது காவல்துறை மற்றும் உளவு அமைப்புகளின் சாதனை), போராட்டத்தில் கலவரம் செய்ய ஆள் அனுப்பும் பாகிஸ்தான் முயற்சிகள், ஆஃப்கனிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கமும் அவர்களின் நோக்கமும் என்று பல முனைகளில் எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல்கள் எழுந்தன.

பஞ்சாபின் அப்போதைய முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று சில விஷயங்கள் பற்றிப் பேசினார். அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. எல்லைக்கோட்டுக்கு இருபுறங்களில் எப்புறம் இருந்தாலும் பஞ்சாபியர்கள் சகோதரர்கள் என்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து பேசினார். அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர், தேசப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்தித்தார் அமரிந்தர் சிங், அப்போது பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முக்கியமாக எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது.

மேலும் அமரிந்தர் சிங்குக்கு நெருக்கமான சிலர் பேசுவதிலும் எழுதுவதிலும் இருந்து நாம் அவதானிப்பது ஒரு விஷயம். இந்த விவசாயிகள் போராட்டம் என்பதை முன்னிலையில் வைத்து அமெரிக்காவில் ட்ரம்ப் ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் நடந்தது போல காவல்துறை அல்லது ராணுவ நடவடிக்கைக்குத் தூண்டி அதைப் பெரிய போராட்டமாக்கி தங்களுக்கு இணக்கமானவர்களை அதிகாரத்தில் அமர்த்த சில சர்வதேச சக்திகள் முயல்கின்றன. அரசு 1984ல் பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்பியது போல ஒரு நடவடிக்கை எடுத்தால் காலிஸ்தான் பிரிப்பது சுலபம், தேசத்தை பலவீனப்படுத்துவது எளிது என்று கணக்குகள் உள்ளன.

விவசாயப் போராட்டத்துக்கு பஞ்சாப் ஹரியாணா மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து கட்டாயமாக வீட்டுக்கு ஒருவர் என்று வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரும் முன்னாள் ராணுவ வீரர்கள் அல்லது இந்நாள் ராணுவ வீரர்களின் தந்தை, அண்ணன் தம்பி போன்ற நெருங்கிய உறவினர்கள். போராட்டக்களத்தில் ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து ராணுவ வீரர்களின் நெருங்கிய உறவுகளுக்கு ஏதும் நிகழ்ந்தால் அவர்களை உணர்வுப்பூர்வமாகப் பாதிக்கும். உள்நாட்டிலும் கலவரத்தை அடக்க சிறப்புப் படைகள் ராணுவம் என்று வரவேண்டிய நிலை வந்தால் மக்களிடையே அமைதியின்மை ஏற்பட்டு அரசு மீது வெறுப்பை உருவாக்கலாம். இத்தகைய திட்டங்களைக் கண்டறிந்து உளவுத்துறையும் பஞ்சாபின் முதல்வராக இருந்தவரும் மத்திய அரசிடம் தெரிவித்தனர்.

இதை தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவாரின் கருத்தோடு பொருத்திப் பார்க்கவேண்டும். “பஞ்சாபை தொந்தரவு செய்து இந்திராகாந்தி உயிரை இழந்தார். பஞ்சாபைத் தொட்டால் மோடிக்கும் அதுவே கதி.” என்றார் பவார். அவர் சொன்னதன் நோக்கம் பிரதமரை மிரட்டவா அல்லது எச்சரிக்கவா என்பது விவாதத்துக்குரியது. ஏனென்றால் பவார் இரட்டைக் குதிரைகளில் அரசியல் சவாரி செய்பவர். அவருக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், செல்வாக்கான மனிதர்களுடன் தொடர்பில் இருப்பவர். தகவல் கசிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதே உளவுத்துரைகள் சொல்லும் கோணம்.

இப்படி ஒரு கலவரத்தை நடத்தி நாட்டின் அமைதியைச் சீர்குலைத்துவிட இந்த விவசாயச் சட்டங்களைப் பயன்படுத்த எதிரிகள் விழைகிறார்கள் என்ற தகவல் பிரதமர் மோடிக்கு ஆதாரங்களுடன் தரப்பட்டன என்றும் அதன் மீதான் ஆலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள், கலந்தாய்வுகள் என்று பலகட்டப் பேச்சுக்களுக்குப் பிறகே பிரதமர் நவம்பர் 20 அன்று குருநானக் ஜெயந்தி அன்று மக்களுக்கு உரையாற்றும் போது இந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

இந்தச் சட்டங்களை வைத்துக் கொண்டு தேசத்துக்கு எதிராகச் செயல்பாட்டில் இறங்கத் தீர்மானித்திருந்த எதிரிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களைப் பிடுங்கிவிட்டார். ஆனால் மக்களிடம் பேசும் போது ”விவசாயிகளின் நன்மை கருதியே இந்தச் சட்டங்களை இயற்றினோம். ஆனால் சில விவசாயிகளுக்கு எங்களால் நன்மைகளைப் புரியவைக்க இயலவில்லை. அது எங்கள் தவத்தில் ஏற்பட்ட குறைபாடாக நான் கொள்கிறேன்” என்றார். மேலும் கூறுகையில் “இந்தச் சட்டங்கள் குறித்துச் சீராய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டும். விவசாயிகள், சட்ட வல்லுநர்கள், அரசு அதிகாரிகள் என்று பல தரப்பினரும் இதில் பங்கேற்று அனைவருக்கும் நன்மை தரும் வகையில் சட்டங்களை மீண்டும் இயற்றி நடைமுறைப்படுத்துவோம். ஆகவே விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார்.

ஆனால், போராட்டக்காரர்கள் இப்போது பிரதமர் சொல்வதை ஏற்கமாட்டோம். நாங்கள் திட்டமிட்டபடி ஊர்வலம் பேரணி என்று போவோம் என்கிறார்கள். சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும் புதிய கோரிக்கைகளை வைத்துப் போராட்டத்தைத் தொடர முனைகின்றனர். தில்லியைச் சுற்றிலும் சாலைகளில் நடைபெறும் போராட்டங்கள் அப்படியே தொடரும் என்கிறார்கள். பொதுமக்கள் பாதிக்கப்படுவது பற்றிக் கவலையில்லை. சட்டமன்றத் தேர்தல் நடக்கும் இடங்களில் ஊர்வலம் பேரணி என்று நடத்தி போராட்டத்தின் வேகம் குறையாது பார்த்துக் கொள்வோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

விளைச்சலுக்கு ஆகும் மொத்தச் செலவுகளையும் உள்ளடக்கிய குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உரிமையாக்கித் தரவேண்டும் என்று புதிய கோரிக்கை வைக்கிறார்கள். அந்த குறைந்தபட்ச ஆதரவு விலை தற்போதுள்ள 23 பயிர்களுக்கு மட்டும் இல்லாமல் எந்தப் பயிர் விளைவித்தாலும் அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தரவேண்டும் என்பது அவர்கள் வைத்துள்ள புதிய கோரிக்கைகளில் ஒன்று. அத்துடன் புதிய மின்சாரச் சட்டத்தையும் வாபஸ் பெறச் சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள். இந்தச் சட்டம் இலவச மின்சாரத்தை அளவீடு செய்து வழங்க வகை செய்கிறது. அளவீடு செய்து வழங்கும் மின்சாரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை அடுத்ததாகச் செய்வார்கள் என்று அஞ்சுகிறோம் ஆகவே சட்டம் கூடாது என்று சொல்கிறார்கள் போராட்டக்காரர்கள்.

இப்படி ஒவ்வொரு கோரிக்கையாக வைத்துப் போராட்டத்தைத் தொடர்வது நல்லதல்ல என்று பல விவசாய அமைப்புகள் சொல்கின்றன. ஆனாலும் ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் எனும் அமைப்பினர் போராட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போன்ற நாடுகளிலும் நடத்தப்படும் என்றும் தங்கள் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் பாஜகவை எதிர்த்து வரும் சட்டமன்றத் தேர்தல்களில் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் சொல்கிறார்கள்.

சட்டங்கள் வாபஸ் ஆன பிறகு வந்திருக்கும் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகளால் போராட்டம் விவசாயச் சட்டங்களுக்கு எதிரானதா அல்லது பாஜகவுக்கு எதிரானதா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. முள்ளில் பட்டுத்துணி விழுந்திருக்கிறது. துணி கிழிந்துவிடாமல் பொறுமையாக மீட்டெடுக்கவேண்டும் என்ற அரசின் முயற்சிக்கு தேசப்பற்றுக் கொண்ட அனைவரும் துணைநிற்பதே இப்போது செய்யத்தக்கது. வந்தே மாதரம். 

Monday 15 November 2021

திரும்பும் வரலாறு - ஏர் இந்தியா - மீண்டும் டாடா நிறுவனத்திடம்...

 1,57,339 கோடி ரூபாய்கள். எங்கோ கேட்டது போலவே இருக்கும். இது அது இல்லை. கடந்த பத்தாண்டுகளில் ஏர் இந்தியா நிறுவனத்திற்காக அரசு செலவு செய்த பணம். இந்த ஆண்டு டிசம்பரில் டாடா நிறுவனத்துக்கு கையளித்துவிட்டு உட்கார்ந்து கணக்குப் பார்த்தால் தோராயமாக இவ்வளவு நட்டக்கணக்கு வரும் என்று நிறுவனத்தையும் கணக்கு வழக்குகளையும் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். 2000ஆவது ஆண்டில் இருந்து தனியாரிடம் கொடுக்கலாம் என்று அரசு முயன்று முடியாது போய் லாபம் நட்டம் என்று மாறி மாறி வந்துகொண்டிருந்த நிறுவனம் ஏர் இந்தியா.

கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம். 

Thursday 21 October 2021

Fab India நிறுவனம் சமீப காலங்களில் சர்ச்சைக்கு உள்ளாகிறது. ஏன்?

இந்த  Fab India நிறுவனம் 1960ல் தொடங்கப்பட்டது. ஜான் பிஸ்ஸெல் என்ற அமெரிக்கர் தொடங்கினார். முதலீடாக 20000 அமெரிக்க டாலர்களை இறக்கினார். இன்றைய டாலர் மதிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் அமெரிக்க டாலர்கள். ஏது காசு என்ற கேள்விக்கு பாட்டி உயில் எழுதி வைத்தார். அவர் இறந்து போனதும் வந்த பணம் என்று சொன்னார்.

Friday 15 October 2021

தொழில் வளர்ச்சியும் சீனப்பாடமும்

 சீனாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனம் எவர்கிராண்ட் கழுத்துவரை கடன் பிடியில் உள்ளது. 300 பில்லியன் டாலர் கடன் அந்த நிறுவனத்துக்கு உள்ளது. ஒரு பில்லியன் என்பது 100 கோடி. கணக்குப் போடுங்கள் 2ஜி ஊழலை விட அதிகத் தொகை வரும். இவ்வளவு கடனில் உள்ள நிறுவனம் நொடித்துப் போனால் சீனப் பொருளாதாரம் படுத்துவிடும். அதுதவிர உலகில் அந்தக் கம்பெனியில் முதலீடு செய்துள்ள பல நிறுவனங்கள் பலத்த அடிவாங்கும். சில பல லீமேன் பிரதர்ஸ் சம்பவங்கள் நிகழலாம். சீன அரசு நொடித்தால் நொடிக்கட்டும் என்றே சென்ற வாரம் வரை இருந்தது. ஆனால் இன்றைய நிலையில் உள்நாட்டிலும் பண விஷயத்தில் பலமான அடிவிழ வாய்ப்பு என்ற நிலையில் வங்கிகள், நிதி ஆலோசகர்கள் என்று பலரையும் அமர்த்தி அடி கொஞ்சம் மெதுவாக விழும்படி என்ன செய்ய முடியும் பாருங்கள் என்று உத்தரவிட்டுள்ளது. காப்பாற்ற முனையவில்லை என்பதே அங்கிருந்து வரும் தகவல்.

Wednesday 29 September 2021

இருளும் சீனம் பாயுமா பாரதம்?

 சீனம் இருளில் வீழ்ந்துவிட்டது. ஆமாம். ஊஹான் வைரஸைப் பரப்பிய அதே நாடுதான். இப்போது போக்குவரத்து சிக்னல் தொடங்கி வீட்டு விளக்குகள் வரை அணைத்து வைக்கச் சொல்லி உத்தரவு. கேட்டால் வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் அக்கறை என்று மூஞ்சியில் இருக்கிற மஞ்சாக் கலரைக் காட்டுகிறார்கள். (அதாகப்பட்டது பீலா விடுகிறார்கள்)

Sunday 19 September 2021

பாகிஸ்தான் தலைநகரில் இரத்தச்சிவப்பு மசூதி

 இந்தப் படத்தில் உள்ள கட்டடம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மஸ்ஜித். இங்கு உள்ள ஜாமியா ஹஃப்ஸா என்ற மதரசாவில் ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்ட பலர் படிக்கிறார்கள். அவர்கள் மாணவர்கள் என்பதால் தாலிப் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆஃப்கன் ஆட்களிடமிருந்து வித்தியாசம் காட்ட பாகிஸ்தானி தாலிபான் என்பார்கள்.

இவர்கள் 2007ல் மூன்று பெண்களைக் கடத்தி அவர்கள் விபச்சாரம் செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி கல்லால் அடித்து கொல்ல வேண்டும் என்றார்கள். சீனத் தூதுவர் தலையிட்டதும் ஏதும் சொல்ல முடியாமல் பாகிஸ்தான் அரசு போலீஸை அனுப்பி அவர்களை மீட்டது.